Tuesday, October 20, 2009

தலைகீழ் மரமாய் நான்

சூனியத்தின் சுயநலங்களை சூசகமாய்ப்
புரிந்துகொள்ளும் நாள் ஒன்று வரும்.
அன்று கடல்மிதக்கும் வானத்திலே
தலைகீழ் மரமாய் நான்தொங்குவேன் - நீயில்லாமல்!

எதையெழுத எப்படியெழுத எங்கெழுத!
உன் நினைவுகளில்லாமல் வறண்டுபோனபின்
எதை எப்படிச் செய்தாலென்ன?
உனக்கே உனக்காக இந்த வரிகளை எழுதும்போது கவனித்தேன்
உன்னை எத்தனை முறை நினைக்கவேண்டியிருக்கிறது என்று!

காலம் மறந்தால் காதலாம்! காதல் மறந்தால்?! நனவில் கனவுகண்டாலும் காதலாம்! கனவெல்லாம் காலம் தவறினால்?
நினைவுகளை வைத்து காலம் செய்ய முடியுமா?

'என்னத்த சொல்ல' என்று உட்கார்ந்தேன்.
எழுதி ஏழுதிக் குவித்தேன்!
உன் பெயரைக்கூட நான் யோசிக்கக் கூடாதா?
மூளையில் எங்கு பதிந்திருந்தன இந்த சங்கிலி வார்த்தைகள்!

Sunday, September 6, 2009

உன் நினைவுகள்

உன் நினைவுகளோடு நான் எவ்வளவு நேரம்
இருந்திருப்பேன் - கேள்வி உன்னிடம்!

ஊரின் குப்பைகளெல்லாம் ஒதுக்கிவிட்டு
சோர்ந்துபோய் அமர்ந்து - நள்ளிரவில்
உணவருந்திக் கொண்டிருக்கும்
அவரிடம் கேட்டுப்பார்

உன் நினைவில் நான் நடந்த தடங்களில்
உன் பெயரின் எழுத்துக்கள் முளைவிட்டு எழுந்ததை.

எப்போதிருந்து மௌனம்?

எப்போதிருந்து நம் சந்திப்புகளில்
மௌனம் அதிக நேரத்தை
ஆக்கிரமித்துக் கொண்டது?

உன் உதடுகளின் துடிப்பில் அர்த்தங்கள்
கண்டுபிடிக்க ஆரம்பித்தது எப்போது?

எப்போதிருந்து உன் கண்களை எதிர்கொள்ள
இயலாமல் தவிக்க ஆரம்பித்தேன்?

உன்கைவிரல்களை கோர்த்து நடக்க ஆரம்பித்த
நாள் எது?

என் நடையின் வேகம் உன் வேகத்திற்கு
சமமானது எந்த நாள்?

தேடிக்கொண்டிருக்கிறேன் - அதற்கு விழா எடுக்கலாம் என்று!

Friday, May 8, 2009

நெருங்கும் அர்த்தங்கள்

சாளரத்தின் அருகே அமர்ந்த பயணத்தில், 
விமானமாய், கப்பலாய் தோற்றமளித்து 
நெருங்க நெருங்க உருமாறும்
அந்த வீட்டைப் போல, 

உன்னை நெருங்க நெருங்க
அர்த்தங்கள் மாற்றிக் கொடுக்கும் 
உன் முக பாவங்களை
நான் என்னவென்று சொல்லுவது?

மொழியை நெருங்கும் போதுதான் 
அதன் புதிர்கள் மறையுமாம்,
சூரியனை நெருங்கிச் செல்லும்போதுதான் 
வால்தோன்றுமாம் எரிகல்லுக்கு,

தோன்றியும் மறைந்தும் 
புரிந்தும் புரியாமலும் 
இருக்கும் புதிர்கள் என்முன்னே - நீ
என்னருகில் இருக்கும்போது மட்டும். 

Saturday, May 2, 2009

காதலைச் சொல்லும் கணங்கள்

ஆயிரம் படங்களில் பார்த்திருப்பேன்.
சிலநேரம் மெய்சிலிர்ப்போடு, பலநேரம் எரிச்சலோடு,
சிலநேரம் மகிழ்ச்சியோடு, பலநேரம் துக்கத்தோடு,
சிலவை இயல்பாக, பலவை மிக செயற்கையாக,
முதிர்ச்சியோடு சில, சிறுபிள்ளைத்தனமாக பல.

நான் உன்னிடம் நம் காதலைச் சொல்லும்
அந்தக் கணங்கள் எப்படி இருக்குமோ?!

Friday, April 24, 2009

இன்னுமொரு தொடுதலை எதிர்நோக்கி....

ஒருவிபத்து......
படுக்கையில் தனித்திருந்த ஒருவாரத்தில்,
பனிபெய்யாத ஒரு காலைப் பொழுதில்
கதிரவன் உதிக்கும் நேரத்திலேயே வந்தாய்.
'காரிருள் திரும்புகிறதோ, சந்திரன் வருகிறதோ!' - என நான்.

அன்றுதான் உன் தொடுதலை உணர்ந்தேன்.
உன் விரல்கள் என் கைகளிலும்
நெற்றியிலும் யாருமறியாத, இதுவரை இடப்படாத
நெருப்புக் கோலங்களை இட்டுச் சென்றன.

"குழந்தையின் ஸ்பரிசமே உலகத்தில் சிறந்தது"
என்று சொல்லித்திரிந்தவன்,
முடிவை மாற்றிக்கொள்ள எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன் - இன்னுமொரு தொடுதலை எதிர்நோக்கி.

Thursday, April 23, 2009

சாத்தானின் காதல்


பேய் அல்லது பிசாசு... 

இந்த வார்த்தைகளுக்குத்தான் எத்தனை வர்ணனைகள்?!
காலில்லை என்றும், தலைவிரி கோலம் என்றும், 
சாந்தமென்றும், சிலதுகள் வெறிகொண்டவை என்றும், 
பறக்க இயலும் என்றும் - அவைகளைப்
பிடித்து அடைத்துவிடலாம் என்றும், 
இன்னும் என்னென்னவோ.... 

ஆனால்..... பேய் என்றதும்
நீ ஏன் என் நினைவுக்கு வருகிறாய்?!


படம்: www.quizilla.com

Sunday, April 19, 2009

உரத்த மௌனங்கள்

பேரண்டத்தின் இயக்கம்,
மனிதமூளையில் சிக்கல்,
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு கடைக்கோடியில்
தனிமையில் நிகழும் பிரபஞ்சப் பெருமோதல்.

இவற்றையெல்லாம் விட நுண்ணிய
புதிர்களைத் தாங்கி வருகிறது
நம் பேச்சினூடே வரும் அந்த
சில வினாடி மௌனம்.

Saturday, April 18, 2009

சோகத்தில் பிறந்த வரிகள்

வீசிய காற்றை, பெய்யாத மழையை,
வராத தண்ணீரை, வந்த தேர்தலை - என
நம் மௌனத்தைக் கொல்ல, எல்லாவற்றையும் பேசுபொருளாக்கினோம்.
நம்மைத் தவிர.. 

எழுத்துலகு பற்றி பேசிக்கொண்டே,
நாம் இருவரும் வாசித்துக்கொண்டோம்.
நீ என் கண்களிலும்
நான் உன் கண்களிலும்.

நீ மகிழ்ச்சியாகத்தான் இருந்தாய்,
அந்த செய்தி உன்னை
பேரிடியாய்த் தாக்கும் வரைக்கும்.
நீயும் அழுவாயா?
என் கேள்விக்கு முற்றுப் புள்ளி்யும் வைத்தாய்.

இந்த வரிகள் சோகத்தில் பிறந்தவைதான்,
ஆனால் உன் சோகத்தில்.

Friday, April 17, 2009

காற்றை கலந்த கண்ணாடி

உனக்காக வாங்கி பரிசளிக்க எண்ணி கனவு கண்ட 
அந்த ஒரு ஜோடி பாதணிகள் 
காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன, 
இப்போதெல்லாம் நான் எடுக்கும் புகைப்படங்களில் 
வண்ணக் கலவை மந்தமாகிவிடுகிறது, சில சமயங்களில் 
புகை மட்டுமே வருகிறது, படங்கள் இல்லை.
 
காற்றை கலந்து செய்த கண்ணாடி அது, 
கடைசியாய் உன்னை சந்தித்து 
உன் கரம் கோர்த்து நின்ற பிம்பம், 
இன்னும் அதில் மிச்சமிருக்கிறது. 
என் நண்பர்கள் மத்தியில் நான் தொலைந்து போய் விட்டேன். 
உன்னை நான் தொலைத்து விட்டதாலோ என்னவோ?

ஆனால், என்முன் நிழலாடும் அந்த 
வாங்கவே இயலாத பாதணிகள் 
நண்பர்கள் என் இருப்பை அறியும்படி,
என்னை தடுக்கி விழ வைக்கின்றன. 

மிதக்கும் கத்திகள்

உன் புனைவுகளில் கனவு காண்கிறேன்...

உன் புனைவுகளை நீ சந்தைப்படுத்தும் உத்திகள் 
மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. 

'உன்னிடமிருந்து கடைசியாய் ஒரு குறுஞ்செய்தி எப்போது வந்தது?' -  என்று, 
என் நகங்களை வளரவிட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். 


கணங்களும் கணித்த்தின் 'கண'ங்களாய் மாறி 
எனை வெட்டியும் பின் சேர்த்தும் வைக்கின்றன - எனில், 

மிதக்கும் கத்திகள், உன் கண்களை 
நான் குறைசொல்ல என்ன இருக்கிறது? 

Thursday, April 16, 2009

என் இதயத்தின் ஒலி...

நீயாவது எனக்கு மறுமொழி கூறுவாய் 
என்றுதானே உன்னை அழைத்தேன்!

காற்றில் உலவும் சருகு - சந்தோஷத்தில் மிதக்கிறது 
என்ற உன் புரிதலை நான் என்னவென்பது?!

உனக்குத் தெரியாதா? அது மடிந்த பின்னர்தான் 
காற்றின் திசையில் இழுத்துச்செல்லப்படுவது... 

நான் திரும்பவும் என்னை புதைத்துக்கொள்கிறேன், 
விழிபிதுங்கும் அந்தப் புதைகுழியில். 

இனி என்னுடன் துணையிருக்க அந்த இருளின் 
மோகினிப் பிசாசே போதும்! 

எங்கோ தூரத்து இருளில் பல வருடங்களுக்குமுன் துரிதமாய்க் காய்ச்சிய 
சாராயப் பலிகளின் முன்னஞ்சலியாய் காய்ச்சியபோதே கத்திக் கரைந்த

கோட்டானின் அலறலாய் ஒலிக்கிறது என் இதயத்தின் ஒலி... 
அந்த ஒலியில் பயணிக்கிறது உன் வாழ்க்கை!